Sunday, January 11, 2009

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! - TPV27

திருப்பாவையின் 27வது பாசுரம்

நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?

பூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம்

இப்பாசுரத்தில் கண்ணன் கோபியரது (நோன்பிருந்து செய்த) வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால் அவர்களுக்கு வரும் பேரானந்தம் தெரிகிறது. கோபியரின் பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது !


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருளுரை:

Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே ! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து எங்களுக்கு பரிசாக வழங்கும், நாட்டவர் எல்லாம் கொண்டாடுகின்ற அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம் ! அழகான ஆடைகளை உடுத்துவோம் !


Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting

பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக !


பாசுரச் சிறப்பு:

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

"பகைவரை வெல்லும் சிறப்பு மிக்கவனே" எனும்போது, பகைவர்கள் வெல்லப்படவேன்டியவர் தானே என்ற எண்ணம் எழுகிறதல்லவா? 'கூடார்' என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பரமனை அறியாதவர்கள், அறிந்தும் பயப்படுகிறவர்கள், அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள், அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள் என்று 'கூடார்' நால்வகைப்படுவர்.

இங்கு கோவிந்தா என்பதற்கு 'பசுவை மேய்க்கும் எளியவன்' என்று கொள்ளும்போது, பரமன் தன்னை ஆகாதவரைக் கூட தன் அன்பினால் வென்றெடுத்து விடுகிறான் என்கிறாள் ஆண்டாள்! அதே அன்பின் காரணமாக அடியவரிடம் தோற்றுப் போகிறான் அப்பரமன். ஆக, இப்பாசுர முதலடியில் கண்ணனின் பேரன்பை ஆண்டாள் முன்னிறுத்துகிறாள். பாண்டவர்கள் மேல் கொண்ட அன்பினால் தானே, 'பரமன் இப்படிச் செய்யலாமா?' என்று சொல்லுமளவுக்கு குருஷேத்திர யுத்தத்தில் சிலபல தந்திரங்களை கண்ணன் செய்ய் வேண்டியிருந்தது!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் (கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!) இப்பாசுரத்தில் ஆரம்பித்து, 28-வது பாசுரத்தில் ஒரு முறை ஓதப்பட்டு (குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு) 29-வது பாசுரத்தில் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) நிறைவடைகிறது.


உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நன்றாக கவனித்தால், இந்த கட்டத்தில், ஆண்டாள் "சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு" என்று குறிப்பாக எதுவும் கண்ணனிடம் வேண்டவில்லை! ஆண்டாள் கண்ணனிடம், "நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறாள் போலும்! "உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?

நாடு புகழும் பரிசினால் நன்றாக

கண்ணன் "நாடு புகழும் பரிசை", அடியவரே பிரமித்துப் போகும் வண்ணம், அவர்களுக்கு அளிக்க வல்லவன். கண்ணன் சுதாமாவுக்கு (அவன் வாய் விட்டுக் கேட்காதபோதும் கூட) வழங்கியது நாடறியும் பரிசல்லவா? அது போலவே, திரௌபதிக்கும், தக்க தருணத்தில் அவள் மானத்தைக் காக்கும் விதமாக, கண்ணன் வழங்கியதும், ஆன்றோரும் சான்றோரும் போற்றிய பரிசு தானே! பஞ்சபாண்டவர்க்கோ யுத்த வெற்றியைப் பரிசாக வழங்கி தர்மத்தை நிலைநாட்டினான் ஸ்ரீகிருஷ்ணன்!

"சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்"

என்று அத்தனை நகைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ளப் போவதாக கோபியர் கண்ணனிடம் சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் பெண்டிருக்கு நகை மேல் ஆசை உண்டு போலும் :-) நீலமேக வண்ணனின் சுந்தர வடிவத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாளின் விருப்பம் இதில் பளிச்சிடுகிறது.

காறை பூணும் கண்ணாடிகாணும்* தன் கையில் வளைகுலுக்கும்*
கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய்திருத்தும்*
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்* தேவன்திறம்பிதற்றும்*
மாறில் மாமணிவண்ணன்மேல்* இவள் மாலுறுகின்றாளே.*

என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசையை ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் பாடியிருக்கிறாள் தானே! அப்படி அலங்கரித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் கண்ணாடிக் கிணற்றில் தன் வடிவழகைக் காணும் விருப்பம் சூடிக் கொடுத்த சுடர்கொடிக்கு இருந்தது போலும்!

ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரும், இப்பாசுரத்திற்கு இணையான பாசுரம் ஒன்றை தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் :-)

நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து *என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே.


ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

மேலும், பகவத் சேவை செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த கோபியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் பாவை நோன்பு நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. கோபியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே! இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற வைணவக் கோட்பாடு கோதை நாச்சியாரால வலியுறுத்தப்படுகிறது.

இன்னொரு விதத்தில் நோக்கினால், அவை எல்லாமே பரமன் தந்தது என்பதால் அவற்றை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு சுகிப்பதில் தவறொன்றும் கிடையாது.

கோபியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது.

பாசுர உள்ளுரை:

1. நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற கோபியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர் !!!

2. 'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும்

3. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய கல்யாண (சௌர்யம், சௌசில்யம், சௌந்தர்யம் ...) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.

4. சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)

5. தோடு - திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமுண்டு)

6. செவிப்பூ - த்வயம் (பக்தியைக் குறிப்பது)

7. பாடகம் - சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)

8. பல்கலன் - ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் (தோடு / செவிப்பூ / பாடகம் என்ற மூன்றும் சேர்த்து!) என்ற குணங்களைக் குறிப்பதாம்.

9. ஆடை - அடியவர் பரமனுக்கு உரிமையானவர் என்பதை உணர்த்துவதாம்.

10. பாற்சோறு - பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்

11. மூடநெய் பெய்து - ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)

12. கூடியிருந்து குளிர்தல் - (கோபியர்) மோட்ச சித்தியை அடைதல்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 281 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்//

இறைவன் இறைவியை மட்டும் தனியாக அனுபவிக்காது,
அடியார்களுடன் முக்தர்களுடன் சேர்ந்து கூடி இருந்து, அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுதலே சிறப்பு என்றும் காட்டுகிறாள்!

ஏன்? அடுத்த பாடலில் விளக்கம் வைக்கிறாள்; உறவேல் ஒழிக்க ஒழியாது என்று! அதனால் இந்த உறவுகளுடன் கூடி இருந்து குளிர்கிறாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நாயகானாய் நின்று என்பது 16ஆம் பாடல்; அன்று தான் கோவிலுக்கு வருகிறார்கள்! நோன்பும் தொடங்குகிறது! அதை முதல் நாள் என்று வைத்துக் கொண்டால், அன்றிலிருந்து 11 ஆம் நாள் ஏகாதசி! அது மாலே மணிவண்ணா! சென்ற பாடல்! ஆக நேற்று முழுதும் ஏகாதசி உபவாசம்!

ஏகாதசி முடிந்து துவாதசி என்பது இன்று கூடாரை வெல்லும் சீர்!
துவாதசி அன்று நோன்பு முடித்து உண்ண வேண்டும் அல்லவா?
அதனால் தான் "பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார" நெய் மணக்கும் பொங்கலையும் இன்று உண்கிறார்கள்!

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
நன்றி.
//இறைவன் இறைவியை மட்டும் தனியாக அனுபவிக்காது,
அடியார்களுடன் முக்தர்களுடன் சேர்ந்து கூடி இருந்து, அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுதலே சிறப்பு என்றும் காட்டுகிறாள்!

//
பகவத் கிருபையை ததீயரோடு கூட்டாக அனுபவிப்பதே வைணவக் கோட்பாடு !!!

//நாயகானாய் நின்று என்பது 16ஆம் பாடல்; அன்று தான் கோவிலுக்கு வருகிறார்கள்! நோன்பும் தொடங்குகிறது! அதை முதல் நாள் என்று வைத்துக் கொண்டால், அன்றிலிருந்து 11 ஆம் நாள் ஏகாதசி! அது மாலே மணிவண்ணா! சென்ற பாடல்! ஆக நேற்று முழுதும் ஏகாதசி உபவாசம்!

ஏகாதசி முடிந்து துவாதசி என்பது இன்று கூடாரை வெல்லும் சீர்!
துவாதசி அன்று நோன்பு முடித்து உண்ண வேண்டும் அல்லவா?
//
கேள்விப்பட்டிருக்கிறேன், சுவாமி :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Test !

உயிரோடை said...

//"உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?//
மிகச் சரி. கோதை பெரிய ஆள் தான்
//ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாரும், இப்பாசுரத்திற்கு இணையான பாசுரம் ஒன்றை தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார்.//
திருப்பல்லாண்டு படிக்கும் போது இதை நான் நினைத்ததுண்டு.
//இன்னொரு விதத்தில் நோக்கினால், அவை எல்லாமே பரமன் தந்தது என்பதால் அவற்றை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு சுகிப்பதில் தவறொன்றும் கிடையாது.//
great
பாசுர உள்ளுரை எல்லாமே உணர்ந்து பின்பற்ற வேண்டியவை

enRenRum-anbudan.BALA said...

நன்றி மின்னல் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம்//

பாலா...முன்னரே கேக்கணும்-ன்னு நினைச்சேன்...
இராகங்களைப் பாசுரங்களுக்கு இட்டவர் யார்?
நாதமுனிகள் தமிழ்ப் பண்களை இட்டாரா? இல்லை இதே ராகங்கள் தானா?

அரையர் சேவையில் இந்த ராகங்கள்/அதன் சாயலா பயன்படுத்துப்படுகின்றன?

சக்தி செந்தில் பூசாரி said...

அப்படிஎன்றால் நீங்கள் சொல்ல வருவது?? என்ன?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails